Wednesday, November 7, 2018

The Ghost Writer - நாம் யாரால் ஆளப்படுகிறோம்?

ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல விரும்பும் விஷயத்தை ஒரு புகைபடத்தில் சொல்லலாம், ஆயிரமாயிரம் வார்த்தைகளை கொண்டு சொல்ல விரும்பியதை ஒரு திரைபடத்தில் சொல்லலாம்.

தி கோஷ்ட் ரைட்டர் என்கின்ற திரைபடம் ரோமன் பொலன்ஸ்கி என்பவரால் இயக்கபட்ட ஆங்கில திரைபடம், சமகாலத்தில் நாம் யாரால் ஆளபடுகிறோம் என்பதை துல்லியமாக தெரிவித்த திரைபடம். அரசியல் ஆர்வம் உள்ள யாரும் இந்த திரைபடம் சொல்லுவதை புறம்தள்ள முடியாது. மக்களாட்சியின் அங்கமாக நம்மை நினைத்து கொள்ளும் மாட்சிமை தாங்கிய குடிமக்கள் ஆகிய நாம் நமக்கு கிடைத்த வேட்பாளர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை ஒர் கணம் திகைத்து போய் உணரும் தருணம் இந்த திரைபடம்.

கதை

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தன்னுடைய பதவி காலத்திற்க்கு பிறகு அமெரிக்காவில் உள்ள தனி தீவில் வசித்து வருகிறார். தன்னுடைய பத்தாண்டு கால பிரதமர் பதவி குறித்து சுயசரிதை எழுதி முடித்து அதை ஒர் தேர்ந்த எழுத்தாளரிடம் திருத்த சொல்லி அவரையும் அந்த தீவிற்க்கு வர சொல்லுகிறார். வருகின்ற எழுத்தாளர் தனக்கு முன் ஒருவர் அதே பணியில் இருந்த போது கடலில் முழ்கி இறந்ததையும், அவர் இடத்திற்க்கு தான் தேர்வு செய்யபட்டுள்ளதையும் அறிந்து கொண்டு தன் பணியை தொடங்கும்போது, முன்னாள் பிரதமர் மீது போர் குற்றம் சுமத்தபட்டு சர்வதேச மனித உரிமை நீதிமன்றத்தில் விசாரிக்கபட போவதை அறிகிறார்.

மேற்கண்ட காரணங்களால் முன்னாள் பிரதமருடைய இல்லத்தில் தங்கி தன் பணியினை மேற்கொள்ளவேண்டிய கட்டாயமாகிறது எழுத்தாளருக்கு. இதனிடையே முன்னர் இறந்த எழுத்தாளர் சில குறிப்புக்களை (கோப்புகளை) ரகசியமாக தற்போதைய எழுத்தாளர் அறையில் வைத்து இருந்ததை அறிந்து, முதல் எழுத்தாளர் கரை ஒதுங்கிய இடத்திற்க்கு சென்று சிலரிடம் பேசும் போது, முதல் எழுத்தாளர் இறப்பில் சில நெருடல்கள் இருப்பதை உணர்ந்து அன்றைய இரவு உணவின் போது முன்னாள் பிரதமர் மனைவியுடன் தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். (அந்த நேரம் முன்னாள் பிரதமர் வாஷிங்க்டனில் உள்ளார்). இதை கேட்டு அதிர்ச்சியுறும் முன்னாள் பிரதமரின் மனைவி ஏதோ நினைத்தவராக ஆடமிடம் சொல்ல நினைத்து பிறகு தவிர்த்துவிட்டு கொட்டும் மழையிலும் வெளியே நடைபயணம் போகிறார்.


மறுநாள் நியூயார்க் செல்ல எழுத்தாளர் முயலும் போது, முதல் எழுத்தாளர் பயன்படுத்திய காரில் அதற்கு முந்தைய பயணவழி முன்னாள் பிரதமரின் நண்பரின் இல்லத்திற்க்கு (இந்த இடம் பாஸ்டன் நகரில் உள்ளது) இட்டு செல்கிறது. அங்கு அவரை சந்தித்து சில போட்டோகளை காட்டும் போது அவருடைய பதில்களில் உண்மை இல்லை என்பது தெரியவருகிறது. தனி தீவிற்க்கு திரும்பும் வழியில் தன்னை இருவர் துரத்துவது கண்டு இரவு மோட்டலில் தங்கி முன்னாள் பிரதமரின் செயலாளரை சந்திக்கிறார். இந்த செயலாளர்தான் முன்னாள் பிரதமர் மீது மனித உரிமை மீறல் குற்றம் சுமத்தியவர். அவரை முதல் எழுத்தாளர் முன்னமே சந்தித்து அவருக்கு உளவு சொல்லியதை கண்டு அதிர்ந்து போகிறார். இதனிடையே எழுத்தாளர் தான் அன்று சந்தித்த மனிதரின் பின்புலத்தை வலைதளத்தில் தேடும் போது முன்னாள் பிரதமர் ஆடமின் கல்லூரி காலம் முதல் தற்போதுவரை அவர் நண்பராக இருப்பதையும், தான் சந்தித்த மனிதர் ஆடமின் கல்லூரி காலத்திற்க்கு சற்று முன்பாக அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ-வின் ஆள் சேர்பாளாராகவும் பின்னர் அவர்களை கையாள்பவராகவும் (மறைமுகமாக) இருப்பது தெரியவந்து அதிர்கிறார். இந்த விஷயத்தை ஆடமின் முன்னாள் செயலாளரிடம் தெரிவிக்கும் போது அவரும் இந்த விஷயத்தை சரியான ஊகம் என்று சொல்லுகிறார். முந்தைய நாட்களில் ஆடம் தான் சார்ந்த கட்சியில் சேர்ந்த விஷயத்தை தவறாகவும், ஆடமின் மனைவி முலமாக மட்டுமே ஆடம் கட்சியில் வெகு விரைவில் வளர்ந்தாகவும் செயலாளர் சொல்லுகிறார்.

இதனிடையே நியூயார்க்கில் இருந்து ஆடம் எழுத்தாளரை தொடர்பு கொண்டு தான் தன்னுடைய தனி விமானத்தில் வருவதாகவும் இடையே பாஸ்டனில் இருந்து எழுத்தாளரை அழைத்து செல்லுவதாக கூறி தன்னுடன் வரும்படி அழைக்கிறார். முன்னாள் செயலரும் அவருடன் செல்ல வற்புறுத்தியும், தற்போது ஆடம் சிஐஏ-வால் மறைமுகமாக கையாளபட்டு 10 ஆண்டுகள் ஆடமின் பதவியின் போது அமெரிக்காவின் அனைத்து முடிவுகளுக்கும் பிரிட்டனை சம்மதிக்க வைத்து காரியம் சாதித்தாகவும், அது குறித்தான் தரவுகளை கண்டறிந்து தன்னிடம் தருமாறும் கோருகிறார், அவ்வாறு தராவிட்டால் எழுத்தாளருடன் தான் பேசிய அனைத்தும் பதிவு செய்யபட்டு உள்ளதாக கூறி அதை சாட்சியாக சேர்க்க போவதாக கூறி ஆடமுடன் அனுப்பி வைக்கிறார். விமானத்தில் ஏறும் போது ஈராக் போரில் ஈடுபட்ட தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் ஆடம் சார்ந்த கட்சிக்கு நன்கொடை அளித்த நிறுவனத்தின் விமானம் என்பதை உணர்ந்து எழுத்தாளர் செல்கிறார். விமானத்தில் ஆடமுடன் வாக்குவாதமிட்டு முந்தைய எழுத்தாளருக்கு நடந்ததையும், அவர் முன்னாள் செயலாளருடன் தொடர்பில் இருந்ததையும் அவர் இறக்கும் முன்பு ஆடமை கையாள்பவரை சந்தித்த நிகழ்வு முதற்கொண்டு அனைத்தையும் சொல்லுகிறார். விமான நிலையத்தில் இறங்கும் போது பிரிட்டன் ஈராக் போரில் இழந்த ராணுவ வீரர் ஒருவரின் தந்தையால் சுடபட்டு ஆடம் இறக்கிறார்.

ஒரு மாதத்திற்க்கு பிறகு ஆடமின் சுயசரிதை திருத்தபட்டு புத்தக வெளியீட்டு விழாவிற்க்கு எழுத்தாளர் வருகிறார். அங்கு முதல் எழுத்தாளர் தான் சொல்ல விரும்பிய விஷயத்தை ஆரம்பத்தில் சொல்லி இருப்பதாக ஆடமின் பெண் செயலாளர் ஒருவரிடம் சொல்லும் போது அது ஆரம்பத்தில் இல்லை என்றும் ஆரம்பங்களில் என்று அந்த பெண் செயலர் கூறுகிறார். தற்போது ஆடமின் சுயசரிதை உண்மை பிரதி எழுத்தாளர் கையில் இருக்க, தனி அறையில் ஆரம்பங்களில் உள்ள வரிகளை கொண்டு இணைத்து படிக்கிறார். “ஆடமின் மனைவி என்பவர் சிஐஏவின் கையாள்பவரின் அறிவுரைபடி ஆடமிடம் காதல் கொண்டு சிஐஏவால் கையாளபட்டுள்ளார்” என்கின்ற வாசகம் வருகிறது. இதனை ஒரு சீட்டில் எழுதி திருமதி ஆடமிடம் சேர்க்கிறார். அங்கு முன்னமே சிஐஏவின் கையாள்பவர் அந்த நிகழ்வில் உள்ளார். அவர் திருமதி ஆடமிடம் தைரியம் சொல்லுகிறார். வெளியே வரும் எழுத்தாளர் காத்திருக்கும் ஒர் காரால் ஏற்றி கொல்லபடுகிறார் என்பதுடன் படம் முடிகிறது.

*********

இந்தியாவின் பிரதமாராக பத்தாண்டு காலம் இருந்தவர் பிரிட்டனில் படித்தவர், உலகவங்கியில் பணியாற்றிவர், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அரசு பணிகளில் இருந்தவர். இந்தியாவின் நிதியமைச்சாராக இருந்தவர் முன்னாள் பிரதமர் ஒருவரின் நண்பராக அவருடன் படித்தவர், முன்னாள் பிரதமர் காதல் மணம் புரிந்தவருடனும் முன்பே அறிமுகமானவர், சில சர்வதேச காரணங்களால் முன்னாள் பிரதமர் கொல்லபட்ட போது அவர் மனைவி இந்தியாவின் பிரதமர் ஆக முயன்றவர். இவைகளை எல்லாம் ஒரே வரிசையில் வைத்து பார்க்கும் போது நம் முன்னாள் பிரதமர் ஏன் ஆடம் லேங் போல் இருந்திருக்க முடியாது என்கின்ற எண்ணம் எழுவதை தவிர்க்க இயலவில்லை.


கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். தரவிறக்கம் செய்து பார்க்க.


http://yifyhdtorrent.com/movie/4663-the-ghost-writer

இந்திய புதிய பொருளாதார கொள்கை - 1991 முதல் இன்று வரை


1991 ஆண்டு ஜுன் மாத பிற்பகுதியில் ஒரு மதிய வேளையில் குடியரசு தலைவர் மாளிகை தர்பார் மண்டபத்தியில் இந்தியாவின் நிதியமைச்சராக  திரு மன்மோகன்சிங் பதவி ஏற்றுக்கொண்டதும் இந்தியாவின் பொருளாதார கொள்கை மாறுபாடு தொடங்குகிறது. அதுவரை நிதியமைச்சராக இருந்தவர்கள் அனைவரும் அரசியல்வாதியாக இருந்து தங்கள் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டி பணியாற்றிவர்கள். ஆனால் இவரோ அரசியல் அரிச்சுவடியின் முதல் படிக்கட்டில் காலடி எடுத்து வைக்கிறார்அது  போல் இந்திய பொருளாதாராமும் தன் முதல் பாதை மாறுதலை தொடங்கியது.  முதன்முதலாக ஒரு பொருளாதார விற்பன்னர் இந்த பதவிக்கு வருகிறார்.

1991 ஆண்டு வளைகுடா போர் முடிவுற்று கச்சா எண்ணெய் உலகை ஆளும் ஒரு கருவி என்பதை நிருபித்திருந்த காலம் அது. அன்று தொடங்கி இன்று (2018) இறுதி வரையிலான 28 ஆண்டுகாலத்தில் இந்தியா இந்த கொள்கை மாற்றாத்தினால் என்ன பெற்றது எதை இழந்தது, இனி வரும் காலங்களில் நம்முடைய சவால்கள் என்ன என்பதை பற்றிய ஒரு மீளாய்வு கட்டுரையே இது.

பயன்கள்:- 

பொருளாதார கொள்கை என்பது எளிய வகையில் கூறுவதானால், ஒரு நாகரிக சமுதாயத்தில் ஒரு அரசின் வருமானத்திற்க்குரிய முடிவுகளே ஆகும். அவ்வகையில் 1991 வரை இந்தியாவில் தொடாமல் இருந்த நாட்டின் வளங்கள், வாய்ப்புக்கள் வெளியிடப்படுகிறது. உலகின் மொத்த மக்கள் தொகையில் 6-ல் ஒருவர் இந்தியராக உள்ள ஒரு நாடு தான் கொண்டுள்ள மனித மற்றும் இயற்கை வளங்களை கொண்டுதான் தன் முன்னேற்றத்தை அடைய முடியும் என்கிற நிதர்சனமான தத்துவத்தை அடிப்படையாக கொண்டு புதிய பொருளாதார கொள்கை கைகொள்ளபட்டது. இக்கொள்கையின் பயன்கள் புள்ளிவிபர கணக்குளுக்கு அப்பாற்பட்டு பார்க்கும்போது, இந்தியாவில் இந்த 28 ஆண்டு காலங்ளில் கிடைக்க பெற்ற பயன்கள்   பின்வருமாறு உள்ளது.

1.    தொழில் வளர்ச்சி:

  தொழில் வளர்ச்சியின் மூலமாக கடந்த 28 ஆண்டுகளில் ஏற்படுத்தபட்ட வேலை வாய்ப்புக்கள் என்பது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் மிகபெரிய பயனை தந்துள்ளது. அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் இந்த அளவு பெருக வேண்டுமாயின் கண்டிப்பாக தொழில் வளர்ச்சியின் மூலமாக மட்டுமே சாத்தியம். அந்த வகையில் தொழில் துறை வளர்ச்சியின் மூமலாக இந்தியாவின் இன்றைய 50% வேலை வாய்ப்புகள் 1991 பிறகே ஏற்படுத்தபட்டதாகும்.

2.      சந்தை நாடாக மாறியது.

1991க்கு பிறகு இந்தியா ஒரு சந்தை நாடாக மாறியதன் மூலம், உலக பொருளாதாரத்துடன் தன்னை இணைத்து கொண்டது, இது உலகை இந்தியாவுடன் விரைவில் இணைத்தது. இதன் மூலம் உலகின் தொழில்துறை உற்பத்தி பொருட்கள் (விவசாயம் உட்பட) அனைத்துக்கும் இந்தியா சந்தை இடமாக மாறியது.  இது போட்டி வாய்ப்பினை இந்தியாவிற்க்கு அடுத்த பத்தாண்டுகளில் ஏற்படுத்தி கொடுத்தது. இதன் மிகசிறந்த உதாரணமாக தகவல் தொழில்நுட்ப துறையினை சொல்லாம். ஏற்கனவே இங்கு வேர் ஊன்றி இருந்த ஆங்கில வழி கல்வி முறை அதற்கு மிகபெரிய ஊக்கமாக இருந்தது. நம்முடைய அன்றாட பயன்பாட்டு பொருட்கள் அனைத்தும் உலகின் மாற்றாத்திற்க்கு ஏற்ப எளிதாக விரைவாக இன்று நமக்கும் கிடைக்க பெறுவதற்கு ஏதுவாக மாறியது. இது புதிய பொருளாதார கொள்கையின் மூலமாக மட்டுமே சாத்தியம், இந்த எளிமையான சென்றடைதல் என்பது சந்தை பொருளாதார கைகொள்ளல் மூமாக அன்றி வேறு வழியில் அல்ல.

வாங்கும் சக்தி

மக்களின் வாங்கும் சக்தி என்பது அவர்கள் செய்கின்ற அல்லது உழைகின்ற வழிமுறையில்தான் உள்ளது. 1991 வரை பெரும்பாலும் விவசாயம் சார்ந்த நாடான இந்தியா, அன்றைய 84 கோடி மக்களில் பெருமளவு விவசாயிகள். தொழிற்துறை, அரசு மற்றும் தனியார் துறைகளில் இருந்த மக்களின் எண்ணிக்கை மிககுறைவாகவே அன்று இருந்தது. தொழில் ஏற்றுமதி, இறக்குமதி குறித்தான கட்டுபாடுகள் மக்களை பராம்பரியமாக தாங்கள் கொண்டு இருந்த தொழில் வழிமுறைகளையே பிழைப்புக்கு ஏற்றுகொள்ள வைத்தது. எளிமையில் சொல்லவேண்டுமானால் 1991க்கு முன்பு மக்களுக்கு தங்கள் வாழ்வாதார வழிமுறைகளும் அதன் மீதான வருமானங்களும் குறைவாகவே இருந்தது (ஆனால் மனநிறைவான வாழ்வு இருந்தது). இதனால் மக்களுக்கு வாங்கும் சக்தியும் குறைவாகவே இருந்தது. 1991க்கு பிறகு இந்த பொருளாதார அமைப்பு முறை மாறிய போது தொழில், வேலை மூலம் கிடைக்க பெற்ற பணத்தின் அளவும், தொழில் உறத்தி பெருக்கத்தின் மூலம் ஏற்பட்ட பண சுழற்சி மிக விரைவாக மிக அதிகமாக ஆனது. இது ஒட்டு மொத்த தேசத்தின் அளவில் ஆண்டு தோறும் அதிகரித்தே வந்து இருக்கிறது, இன்று வரை தொடர்கிறது, இந்த வாங்கும் சக்தியின் அதிகரிப்பு என்பது மக்களின் வாழ்க்கை தரத்தின் அளவை அதிகரித்துள்ளது என்பது இந்த கொள்கையின் மிகபெரிய பயன்.

கட்டமைப்பு

ஒரு தேசம் மக்களால் நிரம்ப பெற்றது என்றாலும், அந்த மக்களுக்கு எந்த மாதிரியான கட்டமைப்பு இருக்கிறது என்பதை பொறுத்தே அவர்கள் வாழும் முறை அளவிடப்படும், அந்த வகையில் இந்த கொள்கை மாற்றத்திற்க்கு முன்பு இந்த தேசம் பெற்றிருந்த கட்டமைப்பு என்பது வேறு, இன்று உள்ளது வேறு. 28 ஆண்டுகளில் இந்த தேசம் பெற்று உள்ள உள்கட்டமைப்புகள் என்பது நம் முந்தைய கொள்கைகளை கொண்டு இருந்தால் இரு  நூற்றாண்டு காலமானலும் அடைய முடியாதது. இது நாமும் ஒட்டு மொத்த உலகுடன் போட்டியிட வாய்ப்பை பெற்று தந்துள்ளது.  இக்கொள்கையின் வேறுபாடு உணர தனி மனிதர் ஒருவர் இரண்டு கொள்கை காலங்களிலும் வாழ்ந்தவராக இருந்தால் ஒழிய தெளிவாக உணர இயலாது. இந்த கட்டமைப்பின் பயன்கள் மனிதர்களின் நேரத்தை சுருக்கியுள்ளது, ஒரு செயலின் விளைவை விரைவாக பெற உதவியுள்ளது. இந்த கட்டமைப்பு இன்றைக்கு இன்றைய மக்களின் தேவைக்கு ஏற்ப உள்ளதா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும், மக்கள் தொகையின் அளவுக்கு ஏற்ப கட்டமைப்பு ஏற்படுத்த இன்னும் நெடுங்காலம் இக் கொள்கை கை கொள்ளபட வேண்டும்.

புதிய தலைமுறை

புதிய பொருளாதார கொள்கை தன்னுடைய 28 ஆண்டில் இந்தியாவில் ஒரு மிகசிறந்த புதிய தலைமுறையை உருவாக்கியுள்ளது என்றால் அது மிகையில்லை. இந்த தலைமுறை பெரும்பாலும் வர்க்க இன வேறுபாடுகளை கடந்து செல்ல தாயராக உள்ளது. சிந்தனையினை அடுத்த அடுக்குகளில் எப்போதும் வைத்து பார்கிறது, கிடைகின்ற வாய்ப்புக்களை அதன் சாதக பாதகத்துடன் பொறுத்தி பார்த்து முன்னேடுக்கிறது. தொழில் வேலை வாய்ப்புக்களில் புதிய உத்திகளை தயக்கமில்லாமல் பரீட்சித்து பார்க்கிறது. உலகை ஒரே நாடாக பார்க்கிறது. தன் திறமைக்கு நிகராண சவாலான வாய்ப்புகளை தேடுகிறது. இந்த மாற்றம் எளிதாக ஒரு நாளில் கிடைக்கபெற்றது இல்லை. இந்த தலைமுறை தன்னப்பிக்கை மிக்கதான சவால்களை விரும்பி ஏற்றுகொள்ளகூடியதாக மாறியதற்க்கு இந்த பொருளாதார கொள்கை மாற்றம் ஒரு முக்கியமான காரணாமாகும்.

இந்த பொருளாதார கொள்கை பயன்பாடுகள் அனைத்தும் மேற்கண்ட ஐந்து தலைப்புகளில் உள்ளடக்கி விட முடியாது. சமூகத்தின் பார்வையில் இருந்து பார்க்கும் போது மேலே கண்ட பயன்பாடுகள் தவிர எண்ணெற்ற நன்மைகளை சாதாரண மனிதர்களுக்கு இந்த பொருளாதார கொள்கை தந்துள்ளது.

தீமைகள்:

சமன்பாடு இன்மை:-

நாணயத்தின் மறுபக்கத்தில் முதலும் பெரிதுமான தீமையில் சமன்பாடு இன்மை இருக்கிறது. ஒர் அரசு தான் கொண்டுள்ள கொள்கையின் மூலமாக எல்லா தர்ப்பு மக்களையும் 100 சதவீதம் பயன்பெறுமாறு வைப்பது இயலாது. அம்மாதிரி இடதுசாரி கொள்கையின் மூலமாக கூட செயல்படுத்த இயலாது, ஆனால் கொள்கையின் பயன்பாட்டு விகிதாச்சாரம் என்பது அனைத்து தரப்பினரையும் முடிந்த அளவு உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். சந்தை பொருளாதாரத்தின் அகப்பெரிய தீமை இந்த சமன்பாடுயின்மையாகும். 1991 ஆண்டிற்க்கு பிறகு இந்தியா இருப்பவர் இல்லாதவர் என்கின்ற இரு பிரிவினரை வெகு வேகமாக வளர்த்து வருகிறது. இந்த நிலைக்கு அரசே காரணம். தான் கொண்டுள்ள ஒரு கொள்கையின் விளைவு அல்லது முடிவு என்பது பெரும்பான்மை சமூகத்திற்க்கு பாதகமாக மாறும் என்றும் அந்த பாதகத்தை தன் அரசின் மற்றொரு துறை தவிர்க்க முடியும் ஆனால் தவிர்க்கவில்லை என்கின்ற போது ஒர் அரசின் ஒட்டுமொத்த தோல்வியாகதான் இதை பார்க்க முடியும், எனவே இந்த கொள்கையின் தீமையினை தடுக்க இதே அரசின் மற்றொரு துறை தடுக்க தவறிவிட்டது, (பெரும்பாலும் நிதி, சமூக முன்னேற்ற, பொது விநியோகம் போன்ற துறகள்) என்பது பொருளாதார கொள்கைக்கு கிடைத்த வெற்றிக்கு சம்பந்தமில்லாதது என்று கூறுவதை ஏற்க இயலாது. அதாவது பொருளாதாரம் வேகமாக வளர்கிறது அதை மட்டும் இந்த கொள்கை குறித்தான வெற்றி தோல்விக்கு அளவுகோலாக பார்க்க வேண்டும் என்று சொல்ல இயலாது. சமூக, நீதி, நிதி, சமத்துவ நிலைகளும் இந்த கொள்கையின் வெற்றி தோல்விக்கு காரணிகளாக எடுத்து கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்து கொண்டால் இந்த கொள்கை தீமையினை அதிகமாக தந்துள்ளது.

வளம் அழிதல்

ஒன்றை கொடுத்துதான் மற்றதை பெற இயலும் என்பது உலக நியதிகளில் ஒன்றாக மாறி வெகுநாளாகிவிட்டது.  அந்த வகையில் 1991 பிறகு இந்தியா ஒட்டு மொத்தமாக இழந்துள்ள இயற்கை வளங்களுக்கும் அதற்கு ஈடான பண பலன் என்பதும் ஒன்றுக்கு ஒன்று சரிசமாக இல்லை. விவசாயத்தை பொரும்பான்மையாக கொண்டுருந்த ஒரு நாடு தன் வழியில் இருந்து பெருமளவு விலகும் போது தன் இயற்கை வளத்தை இழக்க தொடங்குகிறது. விவசாயத்தை ஒழிப்பது என்பது பெரும் நகரமயமாக்கல் என்பதில் தொடங்கி அனைத்து துறைகளையும் தொழில்மயமாமக்குதல் என்பது வரை இருக்கிறது, இந்தியாவில் இந்த கொள்கையினால் இழக்க பெற்ற இயற்கை வளங்கள் அனைத்து மீண்டும் மீட்டமைக்க கூடியது அல்ல. அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டின் வளங்கள் வெகு விரைவாக குறையும் போது, அது இயற்கை சீரழிவின் மூலமாக மட்டும் வெளிப்படும். துரதிருஷ்டவசமாக புதிய பொருளாதார கொள்கை என்பது இயற்கை மற்றும் செயற்கை (போர்) சீரழிவுகளை ஒரு பொருளாதார வாய்ப்பாக மட்டுமே பார்க்கிறது, உலக சந்தைக்கு, நாடுகளுக்கு பேரழிவுழிகள்தான் மிகப்பெரிய வருவாய் ஈட்ட கூடிய வாய்ப்புகளை தருகிறது. சமகாலத்தில் ஈராக்கும், இலங்கையும் இதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள் ஆகும்.

கடினமான மாற்றை முன்வைத்தல்

சந்தை பொருளாதார கொள்கைக்கு மாற்றாக இருப்பது என்பது நடுநிலை பொருளாதாரம் அல்ல. பொதுவுடமை பொருளாதாரமே சந்தை பொருளாதாரத்தின் மாற்றாகும், ஆனால் அம்மாதிரியான பொதுவுடமை பொருளாதார கொள்கை என்பது இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மிக அதிமான உயிர் இழப்பின் பின்னால் மட்டுமே சாத்தியமாகும், காலமும் அதற்கு மிகுதியாக இருக்கும், இயற்கை வளங்கள் அனைத்தும் இழ்ந்துவிட்ட பின்பான பிறகே மாற்று குறித்தான சிந்தனை எற்படும், மேலும் பொருவாரியான இந்திய மக்கள் அனைவரும் இயல்பில் தன்னெழுச்சியற்றவர்கள், யாரேனும் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்கின்ற நம்பிக்கை ஜனநாயக அமைப்பு முறையில் கண்டிப்பாக சாத்தியமற்றதே. ஜனநாயக அமைப்பு முறை அவரவர் திறமைக்கு ஏற்ப திருடி பிழைக்க வாய்ப்பை தருகிறது என்பதே யதார்த்தம் ஆகும். 1989 ஆண்டு கம்யூனிச சீனாவில் தியென்மென் சதுக்கத்தில் ஜனநாயக போராட்டத்தில் கொல்லபட்டவர்களின் அளவை விட அதிகமான உயிரிழப்பின் மூலமாக  இந்திய ஜனநாயகத்தில் பொதுவுடமை கொண்டு வர முடியும். 1858 முதல் 1947 வரையிலான சுதந்திர போரட்டத்தின் மொத்த உயிர் இழப்புகளை விட அதிகமான எண்ணிக்கையின் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். மேலே சொன்னது போன்ற நிலை தோன்ற இன்னும் 25 ஆண்டு காலமாகும். இது அரசியல் கொள்கை முகை நரண். சர்வாதிகாரத்தில் (கம்யூனிச) இருந்து விடுபட்டு ஜனநாயகம்  கிடைக்க தேவையான உயிரழப்பின் அளவை விட அதிகமான உயிரழப்பு இன்றைக்கு பொதுவுடமை தோற்றுவிக்க தேவைபடுகிறது. அதுவும் இன்றைக்கு கால அளவு அறியாமல் எந்த போரட்டமும் நடைபெறுவது இல்லை. அது ஜனநாயக போராட்டமாகட்டும், ஆயுத போராட்டமாகட்டும் இதுவே யதார்த்தம். பொதுவுடமை சிந்தாந்தத்தை கைகொள்ளும் இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் அறிந்த ஒர் உண்மை என்னவெனில், ஜனநாயக ரீதியாக என்றுமே இனி இவ்வுலகில் பொதுவுடமை பெற இயலாது. ஐம்பதாயிரம் சதுர கிலோமீட்டரில் ஆதிக்கம் செலுத்தும் மாவோயிஸ்ட்கள் கூட தங்களுக்கு இந்தியாவிடம் இருந்து விடுதலை வேண்டும் என்கிறார்களே ஒழிய இந்தியாவே விடுதலை பெற வேண்டும் என்று சொல்லுவதில்லை.

அரசியல் முரண்நகை

இந்தியாவின் தற்போதைய பொருளாதார கொள்கையை ஜனநாயக வழியில் எதிர்ப்பவர்கள் தங்கள் கொள்கையை இடத்திற்க்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிகொள்கிறார்கள், தெளிவான மாற்றத்தை முன் வைக்காத எந்த கொள்கையும் எல்லா நாளும் எல்லா வழியிலும் நன்மையை மட்டுமே தரவல்லதல்ல, இதற்கு மிக சிறந்த உதாரணங்கள் மேற்கு வங்கத்தின் சிங்கூரூம், கூடங்குளம் அணு மின்நிலையமும் ஆகும், சந்தை பொருளாதாரத்தை முன்னேடுக்க தன் எதிர் அணியே முயற்சித்து, விவசாய நிலங்களை பிடுங்கி கொள்ள பொதுவுடமை மாநில அரசு முயன்றதும், அதன் மூலமக அதிதீவிர இடதுசாரிகள் போராட்டம் நடத்தியதும் மிகபெரிய அரசியல் முரண்நகை, மாநில அரசுகள் மக்கள் போராட்டத்தை ஒடுக்க வேண்டிய நிலைக்கும் தள்ளபட்டதும், அதுவும் தீவிர பொதுவுடமை கொள்கையுடைய ஒரு மாநில அரசு அசுர வேகத்தில் விளை நிலங்களை கையெகபடுத்த நினைத்ததும் சந்தை பொருளாதாரத்தின் தவறான கொள்கையினை உணர்த்துகிறது. தேவைபட்டால் தன் கையால் தன் கண்ணையே குத்த வைப்பதுதான் இந்த கொள்கையின் சிறப்பாகும். அதுபோலவே கூடங்குளமும், மிகபெரிய தீமையினை விபத்தின் மூலம் ஏற்படுத்த கூடிய வாய்ப்புள்ள ஒர் அணுமின் நிலையத்தை ஆதரித்த அரசியல் நிலைபாடு என்பது பொதுவுடமை கொள்கையாளர்கள் சரியான ஒரு சமயத்தில் தங்கள் கொள்கை கை கழுவுதலை எப்படி செயவார்கள் என்று அறிந்து கொள்ள உதவியது. முந்தைய சோவியத் ரஷ்யாவின் தயாரிப்பு என்பதாலயே அந்த அணுமின் நிலையத்தை ஏற்றுக்கொண்டதும், அதுவே அமெரிக்க 123 ஒப்பந்தத்தை அமெரிக்க இம்பிரியலிசம் (ஏகாதிபத்தியம்) என்று சொல்லி திரு.மன்மோகன் அரசுக்கான ஆதரவை விலக்கி கொண்டதும் பொதுவுடமை என்பதும் நேரத்திற்க்கு ஏற்ப மாற்றிகொள்ள கூடியதே என்று நாம் உணர்ந்தோம். இதுவே சந்தை பொருளாதாராத்தின் மற்றொரு தீமையாகும், தன் கொள்கைகளை ஏதிர்ப்பவர்களையே லாப நஷ்ட கணக்கு பார்க்க வைத்து இறுதியில் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை ஆதரிக்க வைத்து விடும் தன்மையுடது இந்த புதிய கொள்கை. இந்த கொள்கையின் மற்றொரு தன்மை என்னவென்றால், இதை நிறுத்த முடியாது, தடுக்கமுடியாது, தவிர்க்கமுடியாது ஆனால் இதை தடுக்க, நிறுத்த, தவிர்க்க போராட ஒர் வாய்ப்பை மட்டும் தரும், அந்த போராட்டம் வெற்றியை தருமா என்றால் உறுதியாக ஆம் என்று சொல்ல முடியாது.

ஒர் உலகம் ஒர் கொள்கை

1991 பிறகான நவீன இந்தியா என்பது ஒர் உலகம், ஒர் கொள்கை என்கின்ற நிலையை ஏற்றுகொள்ள தயாரகிவிட்டது, நாம் விரும்புகிறோமோ இல்லையோ முதலாம் சந்தை பொருளாதார நாடுகளின் கைபிடித்து நடந்து பழகி இன்று சந்தை பொருளாதார கொள்கை கண்டுபிடிப்பாளர்களை விட அதிமாக கடைபிடிக்கிறோம், நுகர்வு கலாச்சார பின்னணியில் பெரும் வேட்கையை தூண்டும் இந்த கொள்கையானது ஒட்டு மொத்த உலகத்தையும் ஒரே தேசமாக மாற்ற முயற்சிக்கிறது, இந்த முயற்சியின் போது பல்வேறு இன வரக்க கலச்சார முரண்பாடுகள் கொண்ட பல்வேறு இன குழுக்களை கொண்ட இந்தியாவை சிதைக்கிறது, ஒரே கொள்கையினை திணிப்பதின் மூலமாக பல்வேறு இனங்களை ஒரு அணியில் கலக்க செய்கிறது, நகரமயமாக்களையும், விவசாயத்தையும் இரு வேறு துருவங்களாக மாற்றுகிறது. இந்த கொள்கையினை எதிர்ப்பவர்களை மாதம் 25000 ரூபாய் சம்பளத்தில் உள்ள துணை ராணுவ படையினரை கொண்டு  மிக கொடுரமாக சிதைக்கிறது. மொத்ததில் பாராம்பரியம் என்பதை வரலாறாக மாற்றுகிறது, உலகின் எந்த பகுதியில் எது நடந்தாலும் அதன் தீய பாதிப்புகளை பொருளாதார கணக்கீட்டின்படி அனைவரையும் சென்றடைகிறது. எங்கோ விளையும் ஒரு செயலின் விளைவு பொருளாதார கணக்கீடாக மாற்றபட்டு எங்கோ வசிக்கும் மக்களின் சுமையை அதிகரிக்கிறது, உலகை ஆள தொழில் குழுமங்களை ஏற்படுத்துகிறது, பிறகு அந்த தொழில் குழுமங்கள் நாடுகளை ஆள  பிரதமர்களையும், அதிபர்களையும் தயார் படுத்துகிறது. சிரிப்பானாலும் அழுகையானலும் அதற்கு ஒர் விலை வைத்து வசூலிக்கிறது. உலகை ஒர் குடையின் கொண்டு வர ஆயராது பாடுபடுகிறது, எதிர்காலம் குறித்தான பயத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்துகிறது, எந்நேரமும் பொருளாதார வெற்றியையே சிந்திக்க வைக்கிறது, அதில் வெற்றி பெறுவதே அனைத்துகுமான வெற்றியாக சித்தரிக்கின்றது. பிறப்பின் பயனை அடைந்துவிட்டதாக தோன்ற வைக்கிறது. இவை அனைத்தும் தனிமனித வாழ்வில் இந்த கொள்கையின் விளைவால் ஏற்படுத்தபட்ட தீமையாகும்.

அமெரிக்க ஆவண பட இயக்குநர் திரு. மைக்கேல் மூர் தன்னுடைய ’Capitalisam: A True Love Story” என்கின்ற படத்தின் இறுதியில் இப்படி கேட்கிறார், “ஏன் அமெரிக்கரகள் அனைவரும் கேள்வியில்லாமல் முதலாளித்துவத்தை, சந்தை பொருளாதாரத்தை ஏற்றுகொள்கிறார்கள்” என்ற கேள்விக்கு பதிலாக, ”என்றாவது ஒரு நாள் குதிரை தனக்கு முன்னே இருக்கும் கேரட்டை அடந்துவிடலாம்” என்கின்ற எண்ணத்தில்தான் ஒடுகிறது அது போலவே சந்தை பொருளாதாரத்தை அமெரிக்கர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைக்கிறது, ஆனால் குதிரையின் முன் உள்ள அந்த கேரட் (அதை இயக்கும்) குதிரையின் முதுகில் இருக்கும் குதிரையோட்டியின் கையில் உள்ளது என்பதை பெரும்பாலும் அறியாதவர்களாக உள்ளனர் என்கிறார். அதாவது இந்த பொருளாதார கொள்கையினை ஏற்றுகொள்பவர்கள் அனைவரும் குதிரையை போன்றும், கேரட் குதிரைக்கு கிடைக்கும் பலன்கள் போன்றும், ஆனால் குதிரை இறுதிவரை குதிரையோட்டியான தொழில் குழுமங்களுக்காக ஒடுகிறது என்றும் மிகுதியான பயன்கள் தொழில் குழுமங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்று சொல்லி முடிக்கிறார். திரு மைக்கேல் மூர் முதலாம் சந்தை பொருளாதார நாட்டினை சேர்ந்தவர், அவருக்கு இதை பற்றி நம்மைவிட அதிகம் தெரியும்…….

Thursday, May 22, 2014

ரயிலடி வாழ்வு

நேற்று பெங்களூர் செல்வதற்காக ஈரோடு ரயில் நிலையத்தில் காத்திருந்த போது, பார்வையற்ற சுமார் 15 பேர் அந்த ரயில் நிலையத்தில் இரவு கடும் புழுக்கத்திலும், கொசு கடியிலும் உறங்க வந்தனர்... அவர்கள் நிலை கண்டு எழுதிய சிறு கவிதை இது...


#####################################################

கடும் வெயிலும், கணல் தகிக்கும் காற்றும்
கடந்து செல்லும் ரயிலதிவேகமும் விரலிடுக்கில்
செருகி கிடக்கும் எட்டுஎட்டு பொருளும்
என்றுமே தீராத வாழ்வின் நாட்களும்

விற்று தீராத மெய்பொருளும், விற்று
விட்டு விலகி வெகுநாளான மெய்யும்
பகல் இரவை பிரித்தறியா உணர்வுகளும்
பொருள் விற்ற களைப்பும், தினம்
இருமுறை மட்டுமே வெளியேறும் சிறுநீரும்

உடல் சோர்வால் இருள் கவிழ்ந்த
உலகறியும் தன்மையும் ருசியால் மட்டும்
பசியறியும் வண்ணமும் உழைத்துவிட்ட
ஒரு பொழுது உன்னை விட்டு சென்றதற்க்கு
அடையாளமாய் கண் அயரும் பொழுது

கண்ணிருந்தும் நான் வியக்கிறேன்!!!
உன் ஒரு நாள் பொழுதின் ரணம் என்
மொத்த வாழ்வின் ரணத்தை விட அதிகமானது
ஈவிரக்கமற்றது, முடிவில்லாதது, நாளையுமானது.....