Thursday, December 9, 2010

வாழ்வு அழுத்தமும் தற்கொலைகளும்


உலகமய சூழலில் நகர வாழ்வு என்பது அதிக அழுத்தம் தருவதாக உள்ளது. இந்த அழுத்ததின் விளைவால் ஏழ கூடிய வாழ்வியல் கடும் சூழல் இன்று ஏழை எளியோர் தாங்க்கூடியதாக இல்லை. இந்த நிலையில் நகர மய அழுத்தம் என்பது தொழிலாளர்களைதான் அதிகமாக பாதிக்கிறது. கடந்த 11 மாதங்களில் மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் 443 பேர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சூழல் என்பது தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இடங்களில் அதிகமாக நடைபெற முக்கிய காரணம் வாழ்வு முறை மாற்றங்கள் மட்டுமில்லாது பொருள் தேடும் வழிகளும் கடினமாகி வருவதுதான். முந்தைய பத்தாண்டுகளுக்கு முன்பு எவை எல்லாம் ஆடம்பாரமாக இருந்ததோ அது அனைத்தும் இன்றைக்கு அத்தியாவிசயமானதாகி விட்டது. அதிகரித்துவரும் நகரமயம் என்பது மிக முக்கியமாக மனிதன் வாழுமிடதிற்கான தேவை அதிகமாகி வீட்டு வாடகையில் அதிகம் செலவு செய்வதில் தொடங்குகிறது.

மனிதனின் இருப்பிட தேவைக்கு ஏற்ற நகரமயம்தான் இன்றைக்கு ஒழுங்கான நகரமயமாக இருக்க முடியும் ஆனால் இன்றைய நிலையில் வாழ்வில் பொருள் தேடி இடம் பெயரும் மனிதர்கள் மிக முக்கியமாக இருப்பிடத்திற்க்கு தருகிற வாடகை அதிகமாக உள்ளது. மனிதர்கள் வாழும் சூழல் அல்லாத இடத்தில் கூட இன்றைக்கு நகரத்திற்க்கு இடம் பெயரும் மனிதர்கள் வாழ்கிறார்கள். உலகமயம் தந்த நியான் வெளிச்ச கடைகளும், அமெரிக்க மோக வாழ்வு முறைகளும், அளவுகதிகமான விளம்பரங்களால் மனிதனின் வாங்கும் உணர்வை தூண்டும் நுகர்பொருள்களும், பகட்டான வாழ்வினை வாழ்வோரின் ஆடம்பரசெலவுகளும், அதிகரித்துவரும் விலைவாசி உயர்வுகளும் என்று பல காரணங்களால் இன்றைக்கு மனிதனின் நியாயமான தேவைகள் அதிகமாகிவிட்டன. இதன் விளைவாக மனிதன் தன்னுடைய திறமைக்கு மேலான சம்பாரிப்பை செய்ய வேண்டியுள்ளது. அத்தியாவிசய அடிப்படை தேவைகளை தாண்டியும் பெற இந்த சமூகம் ஒவ்வொரு மனிதனையும் பணிக்கிறது. இந்த முறையற்ற கால ஒட்டத்தில் வெறியுடன் பங்கு கொண்டால் ஒழிய நாம் வெல்ல முடியாது என்கிற நிலையினை சாதாரண மனிதன் உணர்ந்து வெகு நாட்கள் ஆகிறது. இப்படி ஒரு தன் ஒழுங்கில்லாத போட்டியின் விளைவால் ஏற்படுகிற விரக்தி முதலில் கடனில் தள்ளுகிறது. பிறகு அந்த கடனை அடைக்க முடியாத போது சண்டை சச்சரவை வளர்க்கிறது.

பெரும்பாலான தற்கொலைகள் அதாவது 40% தற்கொலைகள் இன்றைக்கு கடன் தொல்லையின் விளைவால் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்லுகிறது. அதற்கு அடுத்தபடியாக குடும்ப சச்சரவுகள் காரணமாக ஏற்படுவதாக சொல்லுகிறார்கள். இந்த அனைத்துக்குமே நன்கு உற்று நோக்கி அடிப்படை காரணத்தை கண்டறிந்தோமேயானால் அது பொருளாதார காரணமாகதான் இருக்கும் என்பது உண்மை. பிரச்சனைகளை கண்டு சாதாரண மனிதன் பயந்தது இல்லை, அப்படி பயந்திருந்தால் இன்றைக்கு அவன் இயற்கையை வெல்ல எத்தனிக்க மாட்டான். ஆனால் தனிமனித பிரச்சனைகளை கையாள இயலாத போது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியை / ஆலோசனையை நாட தயங்க கூடாது அப்போதுதான் மனிதன் தன்னை உணர முடியும் தன்னுடைய சவால்களையும் வெல்ல முடியும். மனிதகுலம் கண்டறிந்த தீமைகளிலேயே முக்கியமானது இரு தீமைகள்தான். அதில் ஒன்று, சகமனிதனை கொல்லுதல், இரண்டாவதாக தன்னை தானே அழித்து கொள்ளுதல் ஆகும். முதலாவதை முதலாளித்துவம் நேரடியாக செய்கிறது, இரண்டாவதை அது மறைமுகமாக செய்ய தூண்டுகிறது. உண்மையா இல்லையா சொல்லுங்கள்?

Wednesday, December 8, 2010

வடமுகங்களால் நிறையும் தென் இந்தியா

சமீப காலங்களாக தமிழகம் முழுவதும் பொது இடங்களில் நாம் ஒரு மாற்றத்தை காண்கிறோம். அந்த மாற்றமானது முக மாற்றம் ஆகும். பொது இடங்களில் நாம் முன்பு கண்டு வந்த தினக்கூலிகள், தொழிலாளர்கள் அனைவரும் வட இந்தியர்களாக மாறி வருவதுதான். முன்பு சிற்சில இடங்களில் பணி புரிந்து வந்த வட இந்தியர்களால் நிரம்பியுள்ளது. பெரும்பாலும் தொழிலாளர்களாகதான் இவர்கள் தென்படுகிறார்கள். பெரும் உணவகங்கள், மருத்துவமனைகள், சுகாதார பணியிடங்கள், கட்டிட பணிகள், தொழிலகங்கள், முக்கியமாக உடலை வருத்தும் பணிகளில் இவர்கள்தான் தென்படுகிறார்கள்.

இந்த இடமாற்றம் முக்கியமாக பிகார், .பி போன்ற மாநிலங்களில் இருந்து இங்கு வருபவர்களால்தான் அதிகமாக உள்ளது. இந்திய பொருளாதாரத்தின் மிக முக்கிய நன்மை தராத பலன் என்னவென்றால் கட்டுபாடில்லாத, அமைப்பிற்க்கு உட்படாத, ஒழுங்கற்ற நகரமயமாதல் ஆகும். (இதுவே மற்ற மலைசார்ந்த வட மாநிலங்களில் நடப்பது வேறு, அங்கு மக்கள் இடம்பெயராமல் இந்திய அரசின் சீருடை அணிந்த கொலைகார படைகளை எதிர்த்து போரிட்டு வருகிறார்கள்). இந்த நகரமயமாதல் என்பது இன்றைக்கு தமிழகத்தில் தெற்கு மாவாட்டத்தில் இருந்து மேற்கு மாவட்டங்கள் மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வதை குறைந்துள்ளதை காட்டுகிறது. இந்த குறைவு தென் மாவட்ட மக்கள் வசதியாக வாழ தொடங்கி விட்டதால் ஏற்பட்டதா என்றால் இல்லை. இந்த வட இந்திய முகங்களின் எண்ணிக்கை அதிகமானது எதனால் என்றால், தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு வியாபார நிலங்களாக அதாவது மனை நிலங்களாக ஆக்கப்பட்டுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நிலத்தை விற்று கிராம மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறார்கள். மேலும் வேலை வாய்ப்பு உறுதி திட்ட்த்தின் கீழ் ஆண்டிற்க்கு 100 நாட்கள் வீதம் வேலைக்கு சென்றால் வருடம் ரூ. 10,000/- கிடைக்கிறது. அரிசி கிலோ 1 ரூபாய் வீதம் 20 கிலோவிற்க்கு ஆண்டிற்க்கு ரூ 240-ல் அரிசி கிடைக்கிறது உண்ண அது போதும். புத்துணர்வுக்கு ஊருக்கு ஒராயிரம் டாஸ்மாக் மதுகடையும், உலகை கண்டுகளிக்க அரசு தொலைக்காட்சியும் இருக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க ஏன் பொருள் தேடி சென்னைக்கும், கோவைக்கும், திருப்பூருக்கும் செல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் இன்று வட இந்திய முகங்கள் இங்கு அதிகம் தென்பட காரணம் ஆகும்.

ஏற்கனவே இங்கு வேலை செய்யும் சொந்த மாநிலத்தவர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்க கடும் போராட்டம் நிகழ்த்த வேண்டியுள்ள நிலையில் இந்த வட இந்தியர்கள் தங்கள் தொழிலாளர் நலன்களை யாரிடம் கேட்டு பெறுவர் அல்லது இவர்களுக்குகாக யார் குரல் கொடுப்பார்கள் என்பது அவசியம் பதில் தெரியவேண்டிய கேள்வி. ஒரு சின்ன உதாரணம், இன்று சென்னையில் கட்டப்பட்டு வரும் புதிய தலைமை செயலகம் முழுவதும் வட இந்திய தொழிலாளர்களால்தான் கட்டப்பட்டு வருகிறது. இந்த வேலையில் ஈடுபட்டு சில தொழிலாளர்கள் விபத்தில் உயிரையும் இழந்துள்ளனர். இவர்களில் யாராவது ஒருவர்க்காவது தொழிலாளர் நலன் குறித்தான உரிமைகள் தெரியுமா? அல்லது இவர்களுக்கு என்ன வகையான தொழிலாளர் நல உரிமைகள் அளிக்கப்படுள்ளது அல்லது உறுதி செய்யப்பட்டுள்ளது? இது எதுவுமே யாருக்கும் தெரியாது. இந்த மாநிலத்தின் நேரடி தொழிலாளர்களாக கருதப்பட வேண்டியவர்கள் அவர்கள் என்பது உண்மை. ஆனால் நடப்பது என்ன இன்னமும் கட்டிமுடிக்கபடாத அந்த கட்டிடத்திற்க்கு திறப்பு விழா நடந்து அதை கட்டிய தொழிலாளர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து ஆட்சியாளர்கள் கொண்டாடியதுதான் மிச்சம். இறந்து போன தொழிலாளர் குடும்பத்திற்க்கு அளிக்கப்பட்ட நிவாரணம் என்ன? வெறும் ரணம்தான் இம்மாதிரியானவர்களுக்கு கிடைக்கும் நிவாரணம் ஆகும்.

இன்னும் ஒரு முக்கிய நிலையில் இந்த வட இந்தியர்கள் பெருகி வருகின்றனர். எஞ்சி உள்ள விவசாய நிலங்களில் இவர்கள் தொழிலாளர்களாகவும் உழைத்துவருகின்றனர். நாள் முழுவதும் உழைக்கும் இவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தரப்படுகிறதா எனபதும் சந்தேகமே? ஏன் என்றால் விவசாய கூலியாக இன்றைக்கு நம் மாநிலத்தவர்கள் யாரும் வர தயாராக இல்லை. எனவே இவர்களை விவசாய கூலிகளாக பயன் படுத்துவோர் நியாயமான கூலியை தருகிறார்களா என்று உறுதி சொல்ல யாரும் இல்லை. இது தவிர திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் இவர்கள்தான் தற்போது கடும் உழைப்பை தர வேண்டிய சாய தொழிற்சாலைகளில் பணி புரிந்து வருகின்றனர். குறைந்த்து 15 மணி நேரம் இவர்கள் ஷிப்ட் முறைகளில் கசக்கி பிழியப்படுகின்றனர். மனித தன்மை அற்ற சில நிறுவன்ங்களில் கொத்தடிமைகளாக இவர்கள் பணிபுரியும் அவலவும் நிலவுகிறது. மனிதன் வாழும் நிலைகளில் அல்லாத சுகாதார கேடான இருப்பிடம், கழிப்பிடம் மற்றும் இவர்களுக்கான உணவு தயாரிப்பு என்று அனைத்தும் தரப்படுகிறது. மேலும் இவர்களில் சிலர் நடத்தும் திருட்டு போன்ற சமூக குற்றங்களால் தங்கள் மாநிலத்தை சேர்ந்த அனைவரையும் சிக்கலில் ஆழ்த்துகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டியவர்கள் யார்?

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உரைத்த நம் முன்னோர்கள் வாக்கிற்க்கு ஏற்ப நாம் திரைகடல் ஓடியும் திரவியம் தேடினோம். ஆனால் இன்று திரவியம் தேடாமல் வாழ்வில் பசிக்கு உணவு தேடத்தான் இவர்கள் இடம் பெயர்கிறார்கள். இவர்கள் இங்கு வந்து வாழ்வாங்கு வாழ்ந்து நம்மை ஆள போவது இல்லை. ஆனால் இவர்கள் ஒரு கண்ணியமான உழைத்து வாழ நினைக்கும் மக்கள். நாமே இவர்கள் தற்போது செய்யும் வேலையை முன்பு நாம் செய்தோம் என்பதை மறந்து முதலாளிகள் ஆகிவிட்டோம். இது வரலாறு நமக்கு கற்று தந்துள்ள மோசமான பாடங்களில் ஒன்றாகும்.

இந்த இடமாற்றம் இந்த சமூகத்தை எப்படி மாற்ற போகிறது என்று யாரும் எண்ணுவதாக காணோம். முக்கியமாக இந்த விஷயத்தில் ஏற்பட போகும் சமூக கலாச்சார மாற்றம் ஒர் எல்லைக்கு அப்பால் கண்டிப்பாக சிற்சில சீரழிவையும், மொழி வேற்றுமையையும் உண்டாக்கும். அந்த நிலை வராமல் தடுக்க வேண்டும் என்றால் மக்களின் மனங்களில் மாற்றம் உண்டாக வேண்டும். உலகமயமாக்கலின் ஒர் விளைவே இது. பல்வேறு வேறுபட்ட கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய பன்முகதன்மை வாயந்த சமூகமாக நாம் மாறவிட்டால் இது கண்டிபாக ஒரு சமூக பிரச்சனையாக உருவெடுக்கும். நம் மனங்களை மாற்றாவிட்டால் சமூக மாற்றங்கள் நமக்கு இனிக்காது. செய்வோமா நாம்?