Wednesday, November 7, 2018

The Ghost Writer - நாம் யாரால் ஆளப்படுகிறோம்?

ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல விரும்பும் விஷயத்தை ஒரு புகைபடத்தில் சொல்லலாம், ஆயிரமாயிரம் வார்த்தைகளை கொண்டு சொல்ல விரும்பியதை ஒரு திரைபடத்தில் சொல்லலாம்.

தி கோஷ்ட் ரைட்டர் என்கின்ற திரைபடம் ரோமன் பொலன்ஸ்கி என்பவரால் இயக்கபட்ட ஆங்கில திரைபடம், சமகாலத்தில் நாம் யாரால் ஆளபடுகிறோம் என்பதை துல்லியமாக தெரிவித்த திரைபடம். அரசியல் ஆர்வம் உள்ள யாரும் இந்த திரைபடம் சொல்லுவதை புறம்தள்ள முடியாது. மக்களாட்சியின் அங்கமாக நம்மை நினைத்து கொள்ளும் மாட்சிமை தாங்கிய குடிமக்கள் ஆகிய நாம் நமக்கு கிடைத்த வேட்பாளர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை ஒர் கணம் திகைத்து போய் உணரும் தருணம் இந்த திரைபடம்.

கதை

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தன்னுடைய பதவி காலத்திற்க்கு பிறகு அமெரிக்காவில் உள்ள தனி தீவில் வசித்து வருகிறார். தன்னுடைய பத்தாண்டு கால பிரதமர் பதவி குறித்து சுயசரிதை எழுதி முடித்து அதை ஒர் தேர்ந்த எழுத்தாளரிடம் திருத்த சொல்லி அவரையும் அந்த தீவிற்க்கு வர சொல்லுகிறார். வருகின்ற எழுத்தாளர் தனக்கு முன் ஒருவர் அதே பணியில் இருந்த போது கடலில் முழ்கி இறந்ததையும், அவர் இடத்திற்க்கு தான் தேர்வு செய்யபட்டுள்ளதையும் அறிந்து கொண்டு தன் பணியை தொடங்கும்போது, முன்னாள் பிரதமர் மீது போர் குற்றம் சுமத்தபட்டு சர்வதேச மனித உரிமை நீதிமன்றத்தில் விசாரிக்கபட போவதை அறிகிறார்.

மேற்கண்ட காரணங்களால் முன்னாள் பிரதமருடைய இல்லத்தில் தங்கி தன் பணியினை மேற்கொள்ளவேண்டிய கட்டாயமாகிறது எழுத்தாளருக்கு. இதனிடையே முன்னர் இறந்த எழுத்தாளர் சில குறிப்புக்களை (கோப்புகளை) ரகசியமாக தற்போதைய எழுத்தாளர் அறையில் வைத்து இருந்ததை அறிந்து, முதல் எழுத்தாளர் கரை ஒதுங்கிய இடத்திற்க்கு சென்று சிலரிடம் பேசும் போது, முதல் எழுத்தாளர் இறப்பில் சில நெருடல்கள் இருப்பதை உணர்ந்து அன்றைய இரவு உணவின் போது முன்னாள் பிரதமர் மனைவியுடன் தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். (அந்த நேரம் முன்னாள் பிரதமர் வாஷிங்க்டனில் உள்ளார்). இதை கேட்டு அதிர்ச்சியுறும் முன்னாள் பிரதமரின் மனைவி ஏதோ நினைத்தவராக ஆடமிடம் சொல்ல நினைத்து பிறகு தவிர்த்துவிட்டு கொட்டும் மழையிலும் வெளியே நடைபயணம் போகிறார்.


மறுநாள் நியூயார்க் செல்ல எழுத்தாளர் முயலும் போது, முதல் எழுத்தாளர் பயன்படுத்திய காரில் அதற்கு முந்தைய பயணவழி முன்னாள் பிரதமரின் நண்பரின் இல்லத்திற்க்கு (இந்த இடம் பாஸ்டன் நகரில் உள்ளது) இட்டு செல்கிறது. அங்கு அவரை சந்தித்து சில போட்டோகளை காட்டும் போது அவருடைய பதில்களில் உண்மை இல்லை என்பது தெரியவருகிறது. தனி தீவிற்க்கு திரும்பும் வழியில் தன்னை இருவர் துரத்துவது கண்டு இரவு மோட்டலில் தங்கி முன்னாள் பிரதமரின் செயலாளரை சந்திக்கிறார். இந்த செயலாளர்தான் முன்னாள் பிரதமர் மீது மனித உரிமை மீறல் குற்றம் சுமத்தியவர். அவரை முதல் எழுத்தாளர் முன்னமே சந்தித்து அவருக்கு உளவு சொல்லியதை கண்டு அதிர்ந்து போகிறார். இதனிடையே எழுத்தாளர் தான் அன்று சந்தித்த மனிதரின் பின்புலத்தை வலைதளத்தில் தேடும் போது முன்னாள் பிரதமர் ஆடமின் கல்லூரி காலம் முதல் தற்போதுவரை அவர் நண்பராக இருப்பதையும், தான் சந்தித்த மனிதர் ஆடமின் கல்லூரி காலத்திற்க்கு சற்று முன்பாக அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ-வின் ஆள் சேர்பாளாராகவும் பின்னர் அவர்களை கையாள்பவராகவும் (மறைமுகமாக) இருப்பது தெரியவந்து அதிர்கிறார். இந்த விஷயத்தை ஆடமின் முன்னாள் செயலாளரிடம் தெரிவிக்கும் போது அவரும் இந்த விஷயத்தை சரியான ஊகம் என்று சொல்லுகிறார். முந்தைய நாட்களில் ஆடம் தான் சார்ந்த கட்சியில் சேர்ந்த விஷயத்தை தவறாகவும், ஆடமின் மனைவி முலமாக மட்டுமே ஆடம் கட்சியில் வெகு விரைவில் வளர்ந்தாகவும் செயலாளர் சொல்லுகிறார்.

இதனிடையே நியூயார்க்கில் இருந்து ஆடம் எழுத்தாளரை தொடர்பு கொண்டு தான் தன்னுடைய தனி விமானத்தில் வருவதாகவும் இடையே பாஸ்டனில் இருந்து எழுத்தாளரை அழைத்து செல்லுவதாக கூறி தன்னுடன் வரும்படி அழைக்கிறார். முன்னாள் செயலரும் அவருடன் செல்ல வற்புறுத்தியும், தற்போது ஆடம் சிஐஏ-வால் மறைமுகமாக கையாளபட்டு 10 ஆண்டுகள் ஆடமின் பதவியின் போது அமெரிக்காவின் அனைத்து முடிவுகளுக்கும் பிரிட்டனை சம்மதிக்க வைத்து காரியம் சாதித்தாகவும், அது குறித்தான் தரவுகளை கண்டறிந்து தன்னிடம் தருமாறும் கோருகிறார், அவ்வாறு தராவிட்டால் எழுத்தாளருடன் தான் பேசிய அனைத்தும் பதிவு செய்யபட்டு உள்ளதாக கூறி அதை சாட்சியாக சேர்க்க போவதாக கூறி ஆடமுடன் அனுப்பி வைக்கிறார். விமானத்தில் ஏறும் போது ஈராக் போரில் ஈடுபட்ட தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் ஆடம் சார்ந்த கட்சிக்கு நன்கொடை அளித்த நிறுவனத்தின் விமானம் என்பதை உணர்ந்து எழுத்தாளர் செல்கிறார். விமானத்தில் ஆடமுடன் வாக்குவாதமிட்டு முந்தைய எழுத்தாளருக்கு நடந்ததையும், அவர் முன்னாள் செயலாளருடன் தொடர்பில் இருந்ததையும் அவர் இறக்கும் முன்பு ஆடமை கையாள்பவரை சந்தித்த நிகழ்வு முதற்கொண்டு அனைத்தையும் சொல்லுகிறார். விமான நிலையத்தில் இறங்கும் போது பிரிட்டன் ஈராக் போரில் இழந்த ராணுவ வீரர் ஒருவரின் தந்தையால் சுடபட்டு ஆடம் இறக்கிறார்.

ஒரு மாதத்திற்க்கு பிறகு ஆடமின் சுயசரிதை திருத்தபட்டு புத்தக வெளியீட்டு விழாவிற்க்கு எழுத்தாளர் வருகிறார். அங்கு முதல் எழுத்தாளர் தான் சொல்ல விரும்பிய விஷயத்தை ஆரம்பத்தில் சொல்லி இருப்பதாக ஆடமின் பெண் செயலாளர் ஒருவரிடம் சொல்லும் போது அது ஆரம்பத்தில் இல்லை என்றும் ஆரம்பங்களில் என்று அந்த பெண் செயலர் கூறுகிறார். தற்போது ஆடமின் சுயசரிதை உண்மை பிரதி எழுத்தாளர் கையில் இருக்க, தனி அறையில் ஆரம்பங்களில் உள்ள வரிகளை கொண்டு இணைத்து படிக்கிறார். “ஆடமின் மனைவி என்பவர் சிஐஏவின் கையாள்பவரின் அறிவுரைபடி ஆடமிடம் காதல் கொண்டு சிஐஏவால் கையாளபட்டுள்ளார்” என்கின்ற வாசகம் வருகிறது. இதனை ஒரு சீட்டில் எழுதி திருமதி ஆடமிடம் சேர்க்கிறார். அங்கு முன்னமே சிஐஏவின் கையாள்பவர் அந்த நிகழ்வில் உள்ளார். அவர் திருமதி ஆடமிடம் தைரியம் சொல்லுகிறார். வெளியே வரும் எழுத்தாளர் காத்திருக்கும் ஒர் காரால் ஏற்றி கொல்லபடுகிறார் என்பதுடன் படம் முடிகிறது.

*********

இந்தியாவின் பிரதமாராக பத்தாண்டு காலம் இருந்தவர் பிரிட்டனில் படித்தவர், உலகவங்கியில் பணியாற்றிவர், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அரசு பணிகளில் இருந்தவர். இந்தியாவின் நிதியமைச்சாராக இருந்தவர் முன்னாள் பிரதமர் ஒருவரின் நண்பராக அவருடன் படித்தவர், முன்னாள் பிரதமர் காதல் மணம் புரிந்தவருடனும் முன்பே அறிமுகமானவர், சில சர்வதேச காரணங்களால் முன்னாள் பிரதமர் கொல்லபட்ட போது அவர் மனைவி இந்தியாவின் பிரதமர் ஆக முயன்றவர். இவைகளை எல்லாம் ஒரே வரிசையில் வைத்து பார்க்கும் போது நம் முன்னாள் பிரதமர் ஏன் ஆடம் லேங் போல் இருந்திருக்க முடியாது என்கின்ற எண்ணம் எழுவதை தவிர்க்க இயலவில்லை.


கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். தரவிறக்கம் செய்து பார்க்க.


http://yifyhdtorrent.com/movie/4663-the-ghost-writer

No comments:

Post a Comment