Tuesday, December 7, 2010

மனித நுகர்வும், இயற்கை வள இழப்பும்

மனிதன் நாகரிக வளர்ச்சி அடைய தொடங்கி இன்றைக்கு பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. இந்த வளர்ச்சி என்பது கடந்த 3 நூற்றாண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது என்பது உண்மை. அறிவியல் வளர்ச்சியின் தொடக்கம் என்பது 18 நூற்றாண்டின் தொடக்கம் தொட்டு இன்று வரை மனிதன் நினைத்துதிராத அளவு வளர்ந்துவிட்டது. இந்த வளர்ச்சியின் விலை என்ன என்று இன்றுவரை மனிதன் அதிகமாக உணரவில்லை என்பதே உண்மை.

மனித நாகரிக மற்றும் அறிவியல் வளர்ச்சி இயற்கையின் விலையால் (அழிவால்) அமைய பெற்றது என்பதை இன்று நாம் அதிகமாக உணரவில்லை. அறிவியல் வளர்ச்சியின் ஊடாக இன்று நாம் பெற்று உள்ள போக்குவரத்து நிலை என்பது மனிதன் நினைத்த நேரத்தில் வேண்டிய இடத்திற்க்கு நம்மை இட்டு செல்ல முடியும். ஆனால் இந்த வளர்ச்சியின் விலை என்பது இயற்கை அழிப்பு என்கிற செய்கையின் மூலம்தான் என்பதை மனித குலம் இன்னும் உணரவில்லை. போக்குவரத்தின் விளைவாக நாம் இயற்கையை அதாவது நல்ல காற்று மண்டலத்தை சீரழித்து வருகிறோம். இந்த நிலைதான் இன்று எல்லாவற்றிருக்கும் அமைய பெற்றுள்ளது.

இயறகை சமன்பாடு என்பது இந்த உலகம் தோன்றிய காலம் தொட்டே அமைத்துள்ளது. ஆனால் அந்த சமன்பாட்டை மனித குலம் இன்றைக்கு கெடுத்து, சீரழித்து அடுத்த தலைமுறைக்கு என்று எதுவில்லாமல் செய்துள்ளது. அண்ட வெளியில் கூட கடந்த 60 ஆண்டுகளாக செலுத்தப்பட்ட செயற்கைகோள்கள் மிதந்து வருகிறது. அதாவது மனித குல வளர்ச்சி இன்றைக்கு தான் வாழும் பூமியை தாண்டி விண்வெளியினை மாசுபடுத்தும் அளவு வளர்ந்துவிட்டது. இன்னும் இருபது ஆண்டுகளில் அண்டவெளி முழுவதும் கைவிடப்பட்ட செயற்கை கோள்கள் மற்றும் அங்கு அமைக்கபட்ட விண்வெளி மிதக்கும் மையங்களால் நிரம்பியிருக்கும் என்பது உண்மை.

உலகில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இன்றைக்கு கிராமங்கள் அல்லாத இடங்களில் வசிப்பதாக உள்ளது. இந்த அளவு என்பது இயற்கை சமன்பாட்டை மாற்றும் வலிமைமிக்கது. அதே போல இன்றைக்கு மூன்றில் இரண்டு பங்கு மக்கள் நுகர்வு கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட முதலாளித்துவ நாடுகளில் வசித்துவருகிறார்கள். இந்த நாடுகள் அனைத்தும் இயற்கையை காக்கும் விவசாயத்தை கைவிட்டு வருகிறார்கள் என்பதும் உண்மை. விவசாயத்தின் மீதான மானிய குறைப்பு என்பது இந்த நாடுகளில் அதிகமாக உள்ளது. இதன் தாக்கம் என்பது பொருளாதார அழுத்தம் என்பதை தாண்டி, இயற்கை சமன்பாடில்லாமல் விளை நிலங்கள் அனைத்தும் தொழில் நிலங்களாக மாற்றம் பெற வைக்கும். இது இயற்கை வளத்தை அடியோடு அழிக்கும் முயற்சியாகும்.

நுகர்வு கலாச்சாரத்தை மையபடுத்தியே இன்றைய பொருளாதாரத்தை வளரும் நாடுகள் கொண்டுள்ளன. அந்த வகையில் இந்தியா போன்ற நாடுகளில் விளை நிலங்கள் அனைத்தும் வணிக நோக்கில் மாற்றப்பட்டு தொழில் நிலங்களாக அசுர வேகத்தில் மாற்றம் பெற்று வருகிறது. இது இன்னும் சில ஆண்டுகளில் மனிதன் உணவுக்காக போராடும் நிலையினை கொண்டுவந்து தரும் என்பது உண்மை.

இயற்கை மாசுபாடு மற்றும் அழித்தல் என்பது பூமியை மட்டுமில்லாது பூமியுடன் பிணைந்துள்ள மற்ற இயற்கை செல்வமான நீரையும் அழிப்பதும் ஒன்றாகும். நீரானது பூமியுடன் ஒன்றியுள்ள குளம், ஆறு மற்றும் கடலில் உள்ளது போக நிலத்தின் உள்ளேயும் உள்ளது. இரண்டு வகையாகயான நீரையும் (இயற்கை) நாம் நம்முடைய சம காலத்தில் அழித்துவருகிறோம். நிலத்திற்க்கு மேல் உள்ள கடலை குப்பைகளாலும், கழிவு நீராலும் மனித குலம் அழித்து வருகிறது. இந்த நிலை இன்னும் தொடர்ந்தால் கடல் நீரானது விஷமாக மாறி அங்கு உயிர் வாழும் கடல் வாழ் உயிரனங்கள் அனைத்தும் மெல்ல அழிந்துவிடும். இது தவிர நிலத்தின் மீதான அனைத்து கழிவுகளும் இறுதியில் சங்கமம் அடைவது கடலில்தான் என்கிறது ஒர் ஆய்வு. நிலத்திற்க்கு உள்ளே நிலத்துடன் ஒன்றி இருக்கும் நிலத்தடி நீர் என்பது இன்றைக்கு அடி ஆழம் வரை சென்றதோடில்லாமல் அந்த நீரும் மாசடைந்து நிறம் மாறி பெறப்படுகிறது. இது இன்னும் சில ஆண்டுகளில் மனித குலம் உபயோகப்படுத்தாத நிலைக்கு கொண்டு சென்றுவிடும் என்பதும் உண்மை. தண்ணீருக்காவும், உணவுக்காகவும் இந்த உலகில் போர் முழும் நாள் வெகு தொலைவில் இல்லை.

மேலே சொன்ன நிலைகள் எல்லாம் வரும் காலங்களில் இன்னும் கடினம் ஆகும் என்பதே உண்மை. நாகரிகத்தின் தொடுவான உச்சியில் இருக்கும் மனித குலம் செய்த தவறுகளும் பாவங்களும் அது மனித குலம் பெற்று இருக்கும் வளர்ச்சியுடன் ஒப்பிட்டு நோக்கினால் புலப்படுவது ஒன்றுதான். ஆம், நாகரிக வளர்ச்சி என்பது இயற்கையின் அழித்தல் ஒன்றை கொண்டே முடியும் என்பதாகும். இது நல்லதா கெட்டதா என்பதல்ல நம் விவாதம், கண்டிப்பாக இது மனித குலம் தன் மீதான சுய அழித்தல்தான் இது. ஆனால் இது எதுவரை செல்லும் என்பதே கேள்வி?

Friday, July 2, 2010

பெட்ரோலால் எரியும் அரசியல்

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர் அணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பாகுபாடு இல்லாமல் எதிர்த்து வருவது நம் அறிந்ததே.

இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக வரும் 5 திகதி அறிவிக்கப்பட்டு உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்ததிற்க்கு அனைத்து எதிர் அணி கட்சிகள் மட்டும் இல்லாமல் பொது மக்களும் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்ததை வெற்றி அடைய வைக்க வேண்டும்.

முதலாவதாக இந்த உயர்வை தவிர்த்து இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது, அரசு சொல்லும் காரணமான இந்த விலை உயர்வு சர்வதேச சந்தையில் எற்ப்பட்ட உயர்வை கொண்டே எடுக்கப்பட்ட முடிவு என்பது சற்றே எற்புடையதாக இருந்தாலும் ஏன் இந்தியாவில் மட்டும் எரிபொருள் விலை இந்த அளவு உள்ளது என்பதை அதிகமாக உணர்ந்தவர் யாரும் இல்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகபட்சமாக பீப்பாய் ஒன்றுக்கு 77 அமெரிக்க டாலராக உள்ளது. இது 159 லிட்டர் கச்சா எண்ணெயின் அளவாகும். டாலர் ஒன்றுக்கு 50 ரூபாய் விதம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை ரூ.3850/-. சராசரி ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் விலை ரூ 24.50/- மட்டுமே. இதன் பிறகான சுத்திகரிப்பு மற்றும் தரம் பிரித்தல் ஆகியன ரூ.6.50/- அதிகபட்சமாக செலவாகும். மொத்தம் ரூ.31 ஒரு லிட்டர் பெட்ரோல் விலை. ஆனால் சந்தையில் நாம் செலுத்தக்கூடிய விலை குறைந்தபட்சம் ரூ.55/-.
சுமார் ரூ.24/- விதம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இந்திய அரசுக்கு வரி வருவாயாக செல்லுகிறது.
இந்த வரி அளவை குறைப்பது பற்றி இந்திய அரசு இதுவரை கருத்தில் எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. ஆனால் இந்த 24 ரூபாயில் மாநில அரசின் விற்பனை வரியும் அடங்கியுள்ளது. இது 90% மத்திய அரசின் கையில் உள்ள விவகாரம் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்ததாக தெரியவில்லை. இன்றும் எப்போதும் போல மாநில அரசுகள் விற்பனை வரியை குறைக்க வேண்டும் என்றே பெட்ரோலிய அமைச்சர் சொல்லி வருகிறார். உண்மை இவ்வாறு இருக்க மத்திய அரசும் சரி, அதனுடன் கொள்(ளை)கை கூட்டணி வைத்து இருக்கும் மாநில அரசுகளும் சரி இந்த வியசத்தில் இரட்டை வேடம் கொண்டு பேசுகின்றன.

இரண்டாவதாக, பெட்ரோல் மீதான அரசின் விலைகட்டுப்பாட்டையும் அரசு தளர்த்தி இப்போது ஆயில் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் இஷ்ட்டப்படி விலையை நிர்ணயித்து கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கை கண்டிப்பாக எந்தவித பலன்களையும் சாமனியனுக்கு வரும்காலத்தில் தரப்போவது இல்லை. பெட்ரோல் பொருள் மீதான விலை நிர்ணையம் என்பது இன்று வரை அரசின் மறைமுக மற்றும் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதை இப்போது அரசு தாரைவார்த்துள்ளது.

இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு எற்படும் இழப்பை சரிக்கட்ட விலையை உய்ர்த்தி சரிபடுத்திகொள்ள அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் மீதான அரசின் பிடியில் இருந்து மூழுவதுமாக விடுபடுவது மற்றும் இன்றி சர்வதேச எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கங்களில் மீது ஏற்ப்படும் லாபத்தில் ஒரு மிக பெரும் பகுதியை அடைய போகிறது. எண்ணெய் நிறுவனங்களூக்கு இது ஒரு போனஸாக கிடைக்க போகிறது.

இந்த முடிவானது, இந்திய எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை உயர்த்த போவது என்னவோ உண்மை. அதே நேரம் ஒரு விஷயத்தை உற்று நோக்க வேண்டும் அதிமுக்கிய 4 எண்ணெய் நிறுவனங்களில் அதிகபட்ச பங்குகள் இந்திய அரசால் கைகொள்ளப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் ஈட்டும் லாபமானது இந்திய அரசுக்கு வட்டியாகவும், டிவிடண்டாகவும் சென்றடைகிறது. எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் குறையுமேயானால் (லாபம் அதிகமானால்) அது இந்திய அரசுக்குத்தான் நன்மை. சாதாரணமானவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அதேவேளையில் கட்டுப்பாடற்ற விலை நிர்ணையம் என்பது இந்த 4 நிறுவனங்களை தவிர்த்து எஸ்ஸார், ரிலையன்ஸ், ஷெல் போன்ற எண்ணெய் உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கு கொள்ளை லாபத்தை அளிக்க போகிறது. இது ஒரு வகையில் இந்த தனியார் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு தரப்பட்டுள்ள மறைமுக சலுகை (வழமை போலவே இதற்காக இந்த தனியார் எண்ணெய் நிறுவனங்கள் எவ்வளவு கையூட்டு அளித்தன என்பது தெரியவில்லை) இதன் மூலம் விளங்குவது என்னவென்றால், இந்த விலை உயர்வு அரசுக்கும் தனியார் எண்ணெய் நிறுவனங்களூக்கும் கொளுத்த லாபம் என்பதே ஆகும்.



எண்ணெய் விலை உயர்வையும் அதன் அரசியலையும் தவிர்க்க என்ன வழி?

1. மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் பொதுத்துறை நிறுவனங்கள் என்ற நிலையை மறந்து மத்திய அரசைவிட வேகமாக சந்தை பொருளாதார கூறான லாபம் ஒன்றே என்ற நிலையை கைவிட வேண்டும். அதற்கு முதலாவதாக ”நிர்வகிக்கப்பட்ட விலை நிர்ணையமுறை” அதாவது பெட்ரோல் விலை சுயநிர்ணைய முறையை திரும்ப பெற மத்திய அரசு முன் வர வேண்டும். ஒரு முறை லாபம் பார்க்க தொடங்கிவிட்டால் இந்த நிறுவனங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவர்களை கவனித்து இந்த சுய விலை நிர்ணைய முடிவை வாபஸ் பெற விடமாட்டார்கள் என்பதே உண்மை.

2. கச்சா எண்ணெய் மீதான உற்பத்தி வரியை மறுபரீசிலனை செய்து தற்போது உள்ள வரி விகித்ததை குறைக்க வேண்டும்.

3. மாநில அரசுகள் அனைத்தும் ஒரே விதமான விற்பனை வரி விகிதத்தை கையாள மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

4. பெட்ரோல் விலை மீதான பரிசீலனை ஒவ்வொரு 3 மாத்திற்க்கு ஒரு முறை நடைபெற வேண்டும். எதேதெற்கோ கூடும் மத்திய அமைச்சரவை இதற்கு ஒரு முறை கூடினால் ஒன்றும் தப்பில்லை.

5.தனியார் நிறுவனங்கள் தங்கள் பெட்ரோல் மீதான விலையை சந்தை விலையை விட குறைவாக/அதிகமாக விற்க அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்தால் கண்டிப்பாக உண்மை விலையில் அவர்கள் விற்க முன்வருவார்கள். (ரிலையன்ஸின் முடிகிடந்த பங்குகள் இன்று மீண்டும் திற்ந்திருப்பதே சாட்சி)

இன்றைய இந்திய அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்த தெரியாமல் திக்கு தெரியாத காட்டில் வழிமாறிய வழிபோக்கனை போல உள்ளது. எண்ணெய் விலை உயர்வானது பணவீக்கத்தை உயர்த்துவதோடு இல்லாமல் சாமானிய மக்களின் வாங்கும் சக்தியையும் குறைத்துவிடுகிறது. இதன் மூலம் உற்பத்தி துறை சற்றே சுணக்கம் காணலாம் அதனுடாக பொருட்களின் விலை மீண்டும் அதிகமாக வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய அரசு வரும் 5 தேதி நடைபெற உள்ள விலையுர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை எதிர்கட்சிகளின் மற்றும் ஒரு சம்பரதாயமாண நிகழ்வாக கொள்ளகூடாது. ஏன் என்றால் மக்கள் விழிப்புணர்வு பெற தொடங்கிவிட்டார்கள். அவ்வாறன விழிப்புணர்வு ஆட்சியாளர்களுக்கு வேறு வழிகளில் துன்பத்தைதரும் என்பதே உண்மை. அதற்கு இன்றைய நிதர்சன உதாரணம் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் 26 படைவீரர்கள் பலி.

ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டிய நேரமிது..

Thursday, May 20, 2010

தந்தேத்வடா உணர்த்தும் பாடங்கள்

கடந்த இரு மாதங்களாக மாவோயிஸ்ட்கள் சத்திஸ்கர் மாநிலத்தில் நடத்தி உள்ள தாக்குதல் இந்தியா முழுவதும் ஒரு விதமான எண்ண அலைகளை உருவாக்கி உள்ளது. அந்த எண்ண அலை இதுதான் “மாவோயிஸ்ட்கள் இந்திய இறையாண்மையின் நிகழ்கால ஏதிரிகள்” என்பதே ஆகும். இது ஒரு அளவு உண்மையான விஷயமாக இருந்தாலும் இன்றைய இந்த நிலைக்கு யார், என்ன, எப்படி காரணம் என்பதை இந்திய அரசாங்கமோ, அல்லது ஆள்வோரோ, மற்றவர்களோ முழுதாக உணர்ந்துகொண்டதாக தெரியவில்லை.

மவோயிஸ்ட்கள் மீதான பார்வை அல்லது அவர்களின் செயல் விளைவை இந்திய அரசாங்கம் கவனத்தில் எடுத்துகொண்டு அவர்களை வேட்டையாட தொடங்கியது கடந்த 2009 ஆண்டின் மத்தியில் இருந்துதான். ஆபரேசன் கீரின் ஹண்ட் என்கிற மலைவாழ் பூர்வ குடியினர் மற்றும் பழங்குடியினரை அவர்கள் வசிக்கும் மலை பிரதேசங்களில் இருந்து அகற்ற தொடங்கபட்ட திட்டம்தான் இது. மாவோயிஸ்ட்கள் கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் லால்கர் கிராமத்தை பிடித்து வைத்தபோதே மத்திய அரசு உணர்த்திருக்க வேண்டிய விசயம் இது.

மக்கள் மாவோயிஸ்ட்கள் மீதான பார்வையை உணரதொடங்கிய போதே மத்திய அரசு விழித்திருக்கவேண்டும் ஆனால் அதைவிடுத்து தற்போது மாவோயிஸ்ட்கள் தங்கள் நிலையினை வழுப்படுத்தி கொண்ட பிறகு அதுவும் கிட்டதட்ட 150 பாதுகாப்பு படை வீரர்கள் உயிர் நீத்தபின்பு அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பது அவர்களின் வளர்ச்சியை அரசே உறுதிசெய்தது போல உள்ளது. மாவோயிஸ்ட்கள் தங்கள் மீதான அரசின் பார்வை படமால் இந்த அளவு வளர ஒரு வகையில் அந்தந்த மாநில அரசுகளும் காரணம் என்பதும் உண்மை.

மாநில அரசுகள் இதை தங்களுக்கு இடப்பட்ட தனிப்பட்ட சாவாலாக எடுத்துகொண்டதும் ஒரு வகையில் அவர்கள் விரைவாக வளர மறைமுகமாக உதவியது போல ஆகிவிட்டது. இது மத்திய மாநில அரசுகளின் மொத்த விவகாரம், இதை கூட்டு நடவடிக்கையின் ஊடாக மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்பதையும் மாநில அரசுகள் தற்போது காலம் கடந்து உணர்ந்துள்ளது.

மக்கள் ஒத்துழைப்பு இல்லாத எந்த போரட்டமும் நெடுநாள் நிடிக்க முடியாது, இவ்விஷயத்தில் மாவோயிஸ்ட்கள் தங்கள் மீதான சமுக பார்வையை கண்டு எந்தவிதத்திலும் வருத்தம் கொள்ளவில்லை. சிங்குர் மற்றும் லால்கரில் எற்ப்பட்ட மோசமான சம்பவங்கள் மக்கள் மாவோயிஸ்ட்கள் பக்கம் மக்கள் தஞ்சம் புக வேண்டியதாக போய் விட்டது. டாடாவிற்க்கு இடம் பெற்று தருவதில் எற்ப்பட்ட தவறான அணுகுமுறை மேற்க்கு வங்க அரசுக்கும் ஒரு விதமான தர்மசங்கடத்தை உருவாக்கியது. இதை சரியாக புரிந்துகொண்ட மாவோயிஸ்ட்கள் மக்களிடம் தங்கள் நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்தி மாநில அரசாங்கத்தை தனிமைபடுத்தினர். இது அவர்களுக்கு ஒரு விதமான வசதிமற்றும் பாதுகாப்பு அரணாக போய்விட்டது.

பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யாமல் அல்லது அவர்களுக்கான மாற்று வருமான வாழ்வாதார வழிகளை எற்படுத்திதராமல் அவர்களின் இருப்பை அகற்றும் மாநில அரசின் செயல் எதிர்விளைவுகளையே தரும் என்பது இப்போது கண்கூட காண்கிறோம்.

இதுதவிர மாவோயிஸ்ட்களிடம் தன்னுடைய அறிவார்ந்த திறமையை காட்டுகிறேன் பேர்வழி என்று மத்திய உள்துறை அமைச்சர் சில கருத்துக்களை சொன்னது அரசாங்கம் மாவோயிஸ்ட்ட்களின் முதல் எதிரியாக மாறிவிட்டது. தங்களுடைய நிலையில் இருந்து அவர்களை இறங்கி வந்து பேச வைக்க மத்திய அரசு மிகவும் கஷ்ட்டபட வேண்டியுள்ளது. மத்திய அரசின் பேச்சுவார்த்தை அழைப்பை அவர்கள் நிரகரித்துள்ளதே அதற்கு சாட்சி.

இந்த பிரச்னையினை மொத்தமாக ஒரிரு நாளிலோ அல்லது மாததிலோ தீர்க்க முடியாது என்பதை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் பின்வருமாறு செயல் படவேண்டும்.

1. ஆப்ரேசன் கீர்ன் ஹாண்ட் நடவடிக்கையை உடனே கைவிடவேண்டும்
2. மலைவாழ் மற்றும் பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை உயர்த்த கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொது வினியோக திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
3. இன்றைய நிலையில் அவர்கள் வசிக்கும் இடங்களில் உள்ள கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களிடம் தாரைவார்க்கும் ஒபந்தங்களை மறுபரிசீனை செய்யவேண்டும்
4. அவர்கள் வாழ்விடங்களை விட்டு அகற்றும் முடிவை எடுக்கும் முன் மாற்று இடங்கள் அமைத்து தரவேண்டும். ( இன்றைய நிலையில் அவர்களை வாழ்விடங்களில் இருந்து அகற்றும் முடிவை நெடுநாள் தள்ளிப்போட முடியாது)
5. மலைவாழ் மக்களை ஒழிக்க உருவாக்கிய ஹுடும் ஜுடா போன்ற மக்கள் விரோத போலீஸ் படையை கலைக்க வேண்டும்.
6. மேற்கண்ட அனைத்தும் நடக்கும்வரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முடிவை கைவிடக்கூடாது.
7. ராணுவத்தையோ அல்லது விமானப்படையை உபயோகப்படுத்த கூடாது, அவ்வாறு பயன்படுத்தினால் தற்போது ஒரளவு மக்களுடன் கலந்துவிட்ட மாவோயிஸ்ட்களுடன் அப்பாவிகளும் சேர்ந்து இறப்பது உறுதி.

இந்திய அரசாங்கம் இன்றைய நிலையில் மக்கள் புரட்சியினை எதிர்நோக்கி உள்ளது. உலக அளவில் எற்பட்டு உள்ள பொருளாதார தேக்கம் 2008 ஆண்டில் அமெரிக்கவை அதிகம் பாதித்தது தற்போது அது ஐரோப்பிய யூனியனில் உள்ள கிரேக்க நாட்டை சூரையாடி வருகிறது.

பெருபான்மையான மக்கள் பொருளாதார சீரழிவிற்க்கு உள்ளாகும்போது மெல்ல வன்முறையை வழியாக கொண்ட புரட்சி குழுக்களுக்கு ஆதரவை தர ஆரம்பிக்கிறது. இந்தியாவில் இப்போது மெல்ல அந்த நிலை கிழக்கு மாநிலங்களான மேற்கு வங்காளம், ஒரிசா, சத்திஸ்கர், பிகார் மற்றும் மத்திய பிரதேசம் ஆகியவைகளில் படர தொடங்கியுள்ளது.
இதன பின்தொடர்ச்சி மற்ற மாநிலங்களில் வெகுவிரைவில் ஊடுருவ போகிற நாள் வெகுதொலைவில் இல்லை.

மக்கள் நலன் சாராத எந்த பொருளாதாரா முயற்சியும் அரசாங்கத்திற்க்கு வேறு வழிகளில் பிரச்சனைகளை உண்டு பண்ணுமே தவிர வேறு நற்பலன்களை தராது. அது இன்றைய உள்துறை அமைச்சருக்கு நன்றாக தெரியும் ஏன் என்றால் இதற்கு முன் அவர் கையாண்ட பொருளாதார துறையை அவர் விட்டுவைத்து சென்ற நிலையினை கண்டாலே புரியும்.

மாநில அரசும் பொருளாதார மண்டலங்களை பெருக்க முயற்சிப்பதைவிட இது போன்ற வன்முறை குழுக்களை ஒடுக்க வேண்டும், இல்லையெனில் ஒரு லட்சம் பேர் பயன் பெறக்கூடிய ஒபந்தங்கள் 10 லட்சம் மக்களின் வாழ்வாதார பிரச்சனையாகிவிடும். மத்திய அரசுக்கு அது 100 கோடி மக்களின் வாழ்வாதார பிரச்சனை ஆகிடும்.

இப்படிக்கு

தமிழ் உதயன்